எதிரே வந்த கரடியை சமாளித்த மூன்று இளம் பெண்கள்...இணையதளத்தில் வீடியோ வைரல்
By: Monisha Thu, 27 Aug 2020 11:32:03 AM
மெக்சிகோ நாட்டிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று இளம் பெண்கள் முன்பு திடீரென கரடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்சிகோ நாட்டிலுள்ள சிபின்க்கி என்ற இயற்கை விலங்கியல் பூங்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று இளம் பெண்கள் சென்று இயற்கை அழகை ரசித்து, விதவிதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் முன் கரடி ஒன்று வந்தது. இதனால் மூன்று இளம் பெண்களும் பெரும் அச்சத்தில் இருந்தனர்.
இதனை அடுத்து மூன்று பெண்களில் ஒருவரை நெருங்கி வந்த கரடி ஒரு பெண்ணின் அருகில் சென்று அவரது தோளில் முன்னங்காலை வைத்து நின்றது.
அந்தப் பெண்ணுக்கு உள்ளுக்குள் அச்சம் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அசையாமல் நின்று சமாளித்தார். அதன்பின் சற்று தைரியத்துடன் தனது செல்போனில் கரடியுடன் செல்ஃபியும் எடுத்தார்
ஒரு சில நிமிடங்களில் அந்த பெண்ணை முன்னும் பின்னும் தனது முன்னங்கால்களால் உரசிய அந்த கரடி அதன்பின் தன் வழியில் சென்று விட்டது. இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கரடி வந்ததைப் பார்த்ததும் அச்சத்தில் ஓடாமல் அசையாமல் நின்றதால் தான் அந்தப் பெண்கள் தப்பித்தனர் என நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.