Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டை தவிர்க்க புதிய முறை அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டை தவிர்க்க புதிய முறை அறிவிப்பு

By: Monisha Wed, 23 Dec 2020 09:11:16 AM

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டை தவிர்க்க புதிய முறை அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடக்கும் முறைகேட்டை தவிர்க்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது ஒருமுறை பதிவு அல்லது நிரந்தரபதிவில் கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும்முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே நிரந்தரப்பதிவில் மூலமாக பதிவிறக்கம் செய்யமுடியும்.

மேலும், தேர்வாணையம் மூலம் இனி நடத்தப்பட உள்ள கொள்குறி வகை தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாளும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விடைத்தாளில் ஏற்கனவே பதிலை தெரிவிக்க ஏ, பி, சி, டி என 4 பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு விடையை பதில் அளிக்க வேண்டும்.

tnpsc,exam,aadhar number,omr sheet,abuse ,டி.என்.பி.எஸ்.சி,தேர்வு,ஆதார் எண்,விடைத்தாள்,முறைகேடு

இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பிரிவையும் அதில் இணைக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட வினாவுக்கு பதில் தெரியவில்லை என்றால், கூடுதலாக கொடுக்கப்பட்ட அந்த பிரிவை தேர்வர்கள் தேர்வு செய்யவேண்டும். இவ்வாறாக பதில் அளித்து முடிந்ததும், ஏ, பி, சி, டி மற்றும் கூடுதலாக உருவாக்கப்பட்ட இ பிரிவில் எத்தனை விடைகள் எழுதப்பட்டன? என்பதை கணக்கிட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் குறிப்பிட வேண்டும்.

பின்னர், இடதுபெருவிரல் ரேகையை அதில் பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டு இருக்கிறது. இப்படி அனைத்தையும் சரியாக செய்திருப்பதை தேர்வர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்காக தேர்வு நேரத்தில் இருந்து கூடுதலாக 15 நிமிடம் தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. கணக்கிடுவதில் ஏதாவது பிழை இருக்கும்பட்சத்தில் 5 மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்வை கருப்பு பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Tags :
|
|