Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுக்கு இன்று 8ம் ஆண்டு நினைவஞ்சலி

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுக்கு இன்று 8ம் ஆண்டு நினைவஞ்சலி

By: Nagaraj Thu, 27 July 2023 2:17:13 PM

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுக்கு இன்று 8ம் ஆண்டு நினைவஞ்சலி

சென்னை: இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை விஞ்ஞானி, இளைஞர்களின் ரோல்மாடல் என்ற போற்றுதலுக்குரிய மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ராமேஸ்வரத்தில் ஆவுல்பக்கீர் ஜெயினுலாபுதீன், ஆஷியம்மாள் தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற அவர், குடும்ப சூழ்நிலை கருதி இளம் வயதிலேயே வேலைக்கு சென்றார்.

பள்ளிப்பருவத்தில் சராசரி மாணவனாகவே வளர்ந்த கலாம், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் குறைந்ததால், எம்.ஐ.டி.,-யில் விண்வெளி பொறியியல் பட்டம் பெற்றார்.

கல்வித்தகுதியை படிப்படியாக உயர்த்திக்கொண்ட கலாம், தொடர்ந்து ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டார். தனது கடுமையான உழைப்பினால் படிப்படியாக முன்னேறி அறிவியல் ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைத்து விருதுகள் பெற்றார்.

thoughts,future,india,abdul kalam,neinga vadu ,எண்ணங்கள், எதிர்காலம், இந்தியா, அப்துல் கலாம், நீங்கா வடு

அக்னி ஏவுகணை சோதனைக்குப்பின் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அறியப்பட்ட அப்துல்கலாம் இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தார். விவசாயம், மருத்துவத்துறை வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டி வந்த கலாம் தனது அயராத உழைப்பினால் இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

2002, ஜூலை 26ம் தேதி நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்ற இவர் தனது பதவிக்காலத்தில் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டார். 2020க்குப் பின் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும் என்று கூறிய கலாம் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்து அவர்களிடையே உத்வேகம் அளித்து வந்தார்.

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்ற கலாம், அவர்களின் ரோல்மாடலாகவே விளங்கினார். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் மேல் எப்போதும் அன்பு கலந்த அக்கறை செலுத்தி வந்த கலாம், 2015-ம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது இந்த மண்ணுலகை விட்டுச் சென்றார். கலாமின் மரணம் மக்களின் மனதில் நீங்கா வடுவாக இடம்பெற்றுவிட்டது.

அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது எண்ணங்கள், எதிர்கால இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள் நம்மை விட்டு அகலாது.

Tags :
|
|