Advertisement

சுனாமி நினைவு தினம்; இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்த சோகம்

By: Monisha Sat, 26 Dec 2020 11:47:33 AM

சுனாமி  நினைவு தினம்; இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்த சோகம்

இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும் மறக்க முடியாத காயங்களை பதியச் செய்கின்றன. அந்தவகையில் டிசம்பர் 26-ம் தேதி எனும் இந்த நாள், தமிழகத்தின் கறுப்பு நாள் என்று சொன்னாலும் மிகையில்லை. லட்சக்கணக்கான உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி, பெரும் பணக்காரர்களையும் நடுரோட்டில் நிர்க்கதியாக நிற்கவைத்த நாள். உறவுகளையும், உடைமைகளையும் பறிகொடுத்து அடுத்தவேளை உணவுக்காக கண்ணீருடனும், கவலை தோய்ந்த முகங்களுடனும் வரிசையில் காத்திருந்த மக்களை நினைத்தாலே நம் கண்கள் குளமாகிவிடும்.

இந்தியா, அந்தமான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் முந்தைய நாள் இரவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு நிம்மதியாக உறங்க சென்றவர்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்களை கடல் தாய் அழைத்துக்கொண்டு போய் விடுவாள் என்று தெரியாது. ஆம், சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.

இந்தியாவில் சுனாமியின் தாக்கம் அதிகமாகவே எதிரொலித்தது. தாலாட்டுடன் கரையை தொட்டுச்சென்ற வங்ககடலின் அலைகள், அன்றைய தினம் திடீரென தனது ஆக்ரோஷத்தை காட்டின. அதுவரை கவிதையையும், இனிய நினைவுகளையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும், மன அமைதியையும் அளித்து வந்த அலைகள் முதன்முறையாக பயத்தை ஏற்படுத்தியது. வழக்கத்தை விட கொந்தளிப்பாகவும், கோபமாகவும், ராட்சத வேகத்துடன் வந்த அலைகளை தூரத்திலிருந்து பார்த்த மக்கள் பீதி அடைந்தனர்.

tsunami,tragedy,tears,earthquake,loss of life ,சுனாமி,சோகம்,கண்ணீர்,நிலநடுக்கம்,உயிரிழப்பு

பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் என்னவென்று சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானோரை வாரி சுருட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றது. ‘எட்ட நின்னு பார்க்கும் எதுவும் கிட்ட வந்தால் கஷ்டமே’, என்பதுபோல கரை தாண்டி, சாலையை தாண்டி குடியிருப்பு பகுதிகளையும் கோபகனலாக கொந்தளித்து வந்த கடல் அலைகள் புரட்டியெடுத்து விட்டன.

கரையோரம் இருந்த கடைகள், சாலையோரம் நின்றிருந்த கார்கள் கடல் நீரில் சிக்கி நாசமானது. உயிர் பயத்தால் வீட்டின் மேற்கூரைகளிலும், மொட்டை மாடிகளிலும் கூச்சலிட்டு கொண்டிருந்த மக்களின் அபயகுரலையும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவிக்கும் மக்களும், கால்நடைகளும் நீரில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகளை காண்போர் கண்கள் நிச்சயம் குளமாகிவிடும். அந்தளவு சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவம் ஆடியது.

இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி ஏற்படுத்தியது. இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது. சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க இயலாது.

குறிப்பாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன. நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். ஆடுகள், கோழிகள், மாடுகள் என கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

tsunami,tragedy,tears,earthquake,loss of life ,சுனாமி,சோகம்,கண்ணீர்,நிலநடுக்கம்,உயிரிழப்பு

ஆழிப்பேரலை அழித்தொழித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் மனதில் ஏற்பட்ட சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சன உண்மை. அந்த சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள் தூவப்படும், பால் ஊற்றப்படும்.

சென்னை உள்பட கடலோர கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்துவார்கள்.அந்த நாள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வருத்தம் தோய்ந்த நிகழ்வாகவே அமைந்து வருகிறது. சொல்லமுடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத இழப்புகளையும் ஏற்படுத்திய சுனாமி தனது கோரத்தாண்டவத்தை ஆடி ஆண்டுகள் கடந்தாலும் சுனாமி ஏற்படுத்திய சோகவடு இன்னும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது. ஹாலிவுட் படங்களில் சுனாமி போன்ற பேரழிவு தரும் இத்தகைய காட்சிகளை கண்டாலே மனம் பதறிவிடும். ஆனால் 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்சியை கண்முன்னே பார்த்தவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவா முடியும்?

2004-ம் ஆண்டு சுனாமியில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என்று கணக்கீடுகள் கூறுகின்றன. இழப்புகள் என்றுமே பெரிது. அதிலும் மனித உயிரிழப்புகள் மனதை பாதிக்கக்கூடியவை. அத்தகைய பாதிப்புகளில் இருந்து உறவுகளை பறிகொடுத்தோர் மீளவும், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திப்போம். காலம் மாறலாம், ஆனால் கண்ட காட்சிகள் இன்னும் ஆறாத வடுவாக இருப்பதை மறுக்க முடியாது. எல்லா வலிகளுக்கும் மருந்து உண்டு. ஆனால் இந்த வலிக்கான மருந்தை காலம் தான் கூறவேண்டும்.

Tags :
|