Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் களைகட்டியது திற்பரப்பு; சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மீண்டும் களைகட்டியது திற்பரப்பு; சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

By: Monisha Wed, 16 Dec 2020 11:45:01 AM

மீண்டும் களைகட்டியது திற்பரப்பு; சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெறுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு அணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள். அருவியின் அருகே வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயமான மகாதேவர் கோவிலும் உள்ளது. எனவே, திற்பரப்பு அருவியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்களும் வந்து புனித நீராடி செல்வார்கள்.

waterfall,tourism,park,boat ride,permission ,திற்பரப்பு அருவி,சுற்றுலா,பூங்கா,படகு சவாரி,அனுமதி

இத்தகைய சிறப்பு மிக்க திற்பரப்பு அருவி கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டது. அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு பின்பு நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, பேரூராட்சி ஊழியர்கள் நுழைவு வாயிலில் நின்று சுற்றுலா பயணிகளிடம் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின்ஜோஸ் மேற்பார்வையிட்டார். அருவியில் தற்போது மிதமான தண்ணீர் பாய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

Tags :
|