வாகனத்தில் மோதி நடந்து சென்றவர் பலியான சோகம்... டிரைவர் தப்பியோட்டம்
By: Nagaraj Fri, 02 Sept 2022 5:05:14 PM
கனடா: கனடாவில் வாகனமொன்றில் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ரிச்மன்ட்ஹில்லின் மெகென்ஸீ மற்றும் யொங் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 2009-2011 ஹொண்டா சிவிக் ரக கறுப்பு நிற வாகனமொன்று குறித்த பெண்ணை மோதிச் சென்றுள்ளது.
இந்த விபத்தின் போது வாகனத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். வீதியை மூடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.