மேற்கு வங்கத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த சிறுவன் பலியான சோகம்
By: Nagaraj Mon, 29 Aug 2022 08:07:33 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்த 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே தண்ணீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள மாதுபூரில், அசுத்தமான தண்ணீரை குடித்ததாகக் கூறப்படும் சுபதீப் ஹால்டர் என்ற 12 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு, அசுத்தமான தண்ணீரை குடித்துள்ளான். இதனால் அச்சிறுவனுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே சிறுவன் கிராம மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டான்.
இந்நிலையில், அவனது உடல்நிலை மோசமடைந்ததால், அவன் சக்திநகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் கல்யாணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் அவன் உடல் நலக்குறைவால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசுத்தமான தண்ணீரை குடித்ததால் அங்குள்ள சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த கிராமத்திற்கு மருத்துவக் குழு விரைந்துள்ளது. அங்கு 11 கிராம மக்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் தண்ணீர் அதிகளவு மாசுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும், கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.