Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ‘எச்1 பி‘ விசா வழங்க இடைக்கால தடை விதித்தார் அதிபர் டிரம்ப்

‘எச்1 பி‘ விசா வழங்க இடைக்கால தடை விதித்தார் அதிபர் டிரம்ப்

By: Nagaraj Wed, 24 June 2020 11:24:59 AM

‘எச்1 பி‘ விசா வழங்க இடைக்கால தடை விதித்தார் அதிபர் டிரம்ப்

இடைக்காலத் தடை... ‘எச்1 பி‘ விசா வழங்க இடைக்காலத் தடை விதித்து டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி‘ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி‘ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.

இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

president trump,action,times
visa,ban directive ,அதிபர் டிரம்ப், அதிரடி, ‘எச்1 பி‘ விசா, தடை உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி‘, ‘எச்2 பி‘, ‘எல்‘ மற்றும் ‘ஜே‘ விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்திவைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. ஜனாதிபதி டிரம்பின் இந்த அதிரடி உத்தரவு இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக ‘எச்1 பி‘ விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, ‘எச்1 பி‘ விசா நீட்டிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த உத்தரவால் பாதிக்கப்படுவார்கள்.

president trump,action,times
visa,ban directive ,அதிபர் டிரம்ப், அதிரடி, ‘எச்1 பி‘ விசா, தடை உத்தரவு

இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க தொழிலாளர்கள் நமது நாட்டின் பல்வேறு துறையிலும் பணியாற்றும் வெளிநாட்டினருடன் போட்டியிடுகின்றனர். இதில், தற்காலிகமாக வேலை செய்ய நாட்டுக்குள் நுழைபவர்களும் அடங்குவர். தற்காலிகமாக வருபவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் வருகின்றனர்.

அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையாகப் போட்டியிடுகின்றனர். சாதாரண சூழ்நிலைகளில் இந்தத் தொழிலாளர்கள் அமெரிக்காவின் பொருளாதார நன்மைகளுக்காகச் செயல்பட முடியும். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்தச் சூழலில் இவை பாதிப்பை ஏற்படுத்தும்.

அதாவது, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரிப்பதன் மூலமாக அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். 2020ம் ஆண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். எனவே, இந்த விசாக்களை ரத்து செய்வதன் மூலமாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொரோனா விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க மக்களின் ஆதரவை அதிகரிக்க இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

Tags :
|