Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அட... இது உளவாளி புறாவா? காலில் கேமராவுடன் மீனவர்கள் கையில் சிக்கியது

அட... இது உளவாளி புறாவா? காலில் கேமராவுடன் மீனவர்கள் கையில் சிக்கியது

By: Nagaraj Wed, 15 Mar 2023 11:41:29 PM

அட... இது உளவாளி புறாவா? காலில் கேமராவுடன் மீனவர்கள் கையில் சிக்கியது

புவனேஸ்வர்: கண்காணிப்பு கருவி மற்றும் கேமராவை ஏற்றிச் சென்ற புறாவை ஒடிசா மீனவர்கள் பிடித்தனர். இந்த புறா உளவாளியாக அனுப்பப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் உள்ள சாரதி என்ற படகில் அம்மாநில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர்கள் தங்கள் படகில் வெள்ளை புறா அமர்ந்திருப்பதை பார்த்தனர். படகை வழிநடத்திய மீனவர் சங்கர் பெஹாரா வெள்ளை புறாவை பிடித்து ஆய்வு செய்தார். அப்போது அதன் காலில் கேமரா, மைக்ரோசிப் போன்ற உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. கேமரா கருப்பு நாடாவால் மறைக்கப்பட்டிருந்தது. மேலும் புறாவின் இறக்கைகளில் வெளிநாட்டு மொழிகளில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து மீனவர்கள் புறாவை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சங்கர் பெஹாரா கூறும்போது, “இந்தப் புறா சீனாவிலிருந்து உளவு பார்க்க வந்ததாக சந்தேகிக்கிறோம். ஒடிசா கடற்கரையில் உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கலாம்,” என்றார்.

ஜகத்சிங்பூர் போலீஸ் எஸ்.பி.ராகுல் கூறும்போது, “இந்தப் புறா மற்றும் உளவு கருவிகளை மாநில தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் இறக்கைகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய மொழியியலாளர்களின் உதவியையும் நாடியுள்ளோம். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை,” என்றார்.

இந்த புறா உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பாரதிப் பகுதியைச் சுற்றியுள்ள பாலசோர் தீவில் ஏவுகணை சோதனை மையம் மற்றும் ஒடிசா கடற்கரையில் ஐஓசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :