Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தி பூமி பூஜை விழாவில் பங்கேற்றது குறித்து உமாபாரதி விளக்கம்

அயோத்தி பூமி பூஜை விழாவில் பங்கேற்றது குறித்து உமாபாரதி விளக்கம்

By: Nagaraj Wed, 05 Aug 2020 10:30:00 PM

அயோத்தி பூமி பூஜை விழாவில் பங்கேற்றது குறித்து உமாபாரதி விளக்கம்

ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை அறிவுறுத்தலின் பேரில், பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டதாக பாஜக மூத்த தலைவர் உமாபாரதி விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரமார் கோயிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்ததாகவும், பல தடைகளை தாண்டி இன்று கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது. ஏனென்றால், கொரோனா அச்சம் காரணமாக பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அவர் முன்னதாக கூறியிருந்தார்.

uma bharti,description,foundation ceremony,participation,twitter ,உமாபாரதி, விளக்கம், அடிக்கல் நாட்டு விழா, பங்கேற்பு, ட்விட்டர்

விழா முடிந்த பிறகு கோயிலுக்கு செல்லவிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் பூமி பூஜையில் கலந்து கொள்பவர்களை நினைத்து தனக்கு கவலையாக இருப்பதாகவும், குறிப்பாக பிரதமர் மோடியை நினைத்து அதிக கவலை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் விழாவில் கலந்து கொண்டது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்டது தொடர்பாக அவர் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், 'நான் ராமர் மீது அதிகம் பக்தி கொண்டவள். நான் பூமி பூஜை விழாவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை மூத்த அதிகாரி அறிவுறுத்தி இருந்தார். அதனால்தான் விழாவில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்' என்று கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது மிகப்பெரிய விஷயம். இதன்மூலம் இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை என நாம் கூறமுடியும் என்று உமாபாரதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags :