Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெண்டயம்பட்டியில் பராமரிப்பின்றி உள்ள அம்மா பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

வெண்டயம்பட்டியில் பராமரிப்பின்றி உள்ள அம்மா பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 11 May 2023 08:01:37 AM

வெண்டயம்பட்டியில் பராமரிப்பின்றி உள்ள அம்மா பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பின்றி உள்ளதை உடன் சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது.

பத்தாயிரம் சதுர அடி பரப்பில் முற்றிலும் நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நடுவில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அதிநவீன சாதனங்கள் மேற்கூரையுடன் அமைந்த ஒரு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு வந்து உடற்பயிற்சி செய்பவர்கள் வசதிக்காக தனித்தனியான கழிவறை வசதியும், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த பூங்கா எந்தவித பராமரிப்பும் இன்றி யாரும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகிறது இதில் உள்ள குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் துருப்பிடித்து காணப்படுகின்றன.

mom park,disorder,exercise equipment,emphasis ,அம்மா பூங்கா, சீர்கேடு, உடற்பயிற்சி கருவிகள், வலியுறுத்தல்

அதேபோல விலையுயர்ந்த உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் காட்சி பொருளாக காணப்படுகின்றன. சில சாதனங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த பூங்காவின் நிறைவு பகுதியில் காணப்படும் கழிவறை கதவுகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட்த்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா தற்போது யாரும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அதிநவீன உடற்பயிற்சி சாதனங்களை சிறப்பு அனுமதி பெற்று பூதலூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு செய்வதால் மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள பொருட்கள் அனைத்தும் வீணாகி கொண்டிருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்கள் ஆக்கிரமிக்கும் முன்பு சீரமைத்து முழுமையாக செயல்படும் அளவிற்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் இங்கு உட்புகுந்து சமூக விரோதிகள் பொருட்களை சேதம் செய்யும் நிலையும் உள்ளது. எனவே இந்த பூங்காவை நல்ல முறையில் பராமரித்து பயன்படக்கூடிய அளவில் மாற்றினால் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர். போலீஸ் மற்றும் ராணுவப்பணிகளுக்காக செல்ல நினைக்கும் வாலிபர்களுக்கு இங்குள்ள உடற்பயிற்சி சாதனங்கள் வெகுவாக உதவிகரமாக இருக்கும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags :