ஜிமெயில் திடீர் முடக்கம்...உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதி
By: Monisha Fri, 21 Aug 2020 09:24:08 AM
இணையதள உலகின் மிக பிரபலமான தேடுபெறியான கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் பிரிவான ஜிமெயில் நேற்று காலையில் திடீரென முடங்கியது. இதனால் இ-மெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரிக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் பைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை.
இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.
முடங்கிப்போன இ-மெயில் சேவையை மீண்டும் செயல்படுத்த கூகுள் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனால் பல பகுதிகளில் பயனாளர்கள் இ-மெயில் சேவையை மீண்டும் பெற்றனர். எனினும் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை மீட்டெடுக்க கூகுள் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து அனைத்து பயனாளர்களுக்கும் இ-மெயில் சேவை திரும்ப கிடைப்பதற்காக விரைவில் தீர்வு காணப்படும் என கூகுள் நிறுவனம் நேற்று மாலையில் அறிவித்தது.