பாதித்தவர்கள் புகாரை பதிவு செய்யலாம்... பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி அறிவிப்பு
By: Nagaraj Mon, 24 Oct 2022 6:36:41 PM
திருச்சி: தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் பணம் கட்டி பாதித்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப் பிரிவுக்கு புகாரினை அனுப்பி வைக்கலாம் என்று டிஎஸ்பி லில்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்த கமாலுதீன், தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு லாபம் கொடுப்பதாகக் கூறி தங்களை ஏமாற்றிவிட்டதாக, அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்த தன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
செய்யப்பட்டு, முதலீட்டாளர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில், இதுவரை 6,131 பேர் புகார் மனு அளித்துள்ளனர். இதன் மூலம் ரூ.387
கோடிக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை
நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த பேருந்து நிறுவனத்தில் முதலீடு
செய்து ஏமாற்றம் அடைந்து இதுவரை புகார் அளிக்காதவர்கள், உடனடியாக திருச்சி
மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 0431-2422220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.