Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜய் மல்லையாவின் திட்டம் லீக்... நாடு கடத்தப்படுவதை தடுக்க பிரிட்டனில் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்தாரா?

விஜய் மல்லையாவின் திட்டம் லீக்... நாடு கடத்தப்படுவதை தடுக்க பிரிட்டனில் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்தாரா?

By: Nagaraj Tue, 19 May 2020 3:36:27 PM

விஜய் மல்லையாவின் திட்டம் லீக்... நாடு கடத்தப்படுவதை தடுக்க பிரிட்டனில் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்தாரா?

வங்கிக் கடன் மோசடி வழக்கில், நாடு கடத்தப்படுவதை தவிர்க்க, பிரிட்டனில் அடைக்கலம் தேட, விஜய் மல்லையா ரகசியமாக முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முன்பே விண்ணப்பம் செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர், விஜய் மல்லையா, வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து அவர் மீது, நிதி மோசடி மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், விஜய் மல்லையாவை நாடு கடத்த, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம், ஏப்., 20ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

vijay mallya,uk,refuge,sudden turn,cbi ,விஜய் மல்லையா, பிரிட்டன், அடைக்கலம், திடீர் திருப்பம், சிபிஐ


இந்நிலையில் பிரிட்டன் சட்டப்படி மல்லையாவை 28 நாட்களுக்குள், அதாவது, ஜூன், 1க்குள், நாடு கடத்தும் உத்தரவில், அந்நாட்டு உள்துறை அமைச்சர், பிரீத்தி படேல் கையெழுத்திட வேண்டும். இந்நிலையில், ''மல்லையா, தான் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க, பிரிட்டன் அரசிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருக்கலாம்,'' என, கரிஷ்மா வோரா என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: பிரிட்டனில், ஒருவர் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த பின் அதன் மீது முடிவெடுக்கும் வரை அவரை நாடு கடத்த முடியாது. இந்த விண்ணப்பம் தொடர்பாக, பல கட்ட பரிசீலனை நடக்கும். அதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஒருவர் அடைக்கலம் கோரி அளிக்கும் விண்ணப்பமும், அது தொடர்பான நடவடிக்கைகளும், அவர் உயிருக்கு உள்ள அச்சுறுத்தல் கருதி ரகசியமாகவே வைத்திருக்கப்படும்.

உள்துறையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, அது குறித்த விபரம் தெரியும் .அதேசமயம், நீதிமன்றம், நாடு கடத்த உத்தரவிட்ட பின் அடைக்கலம் கோரி விண்ணப்பிக்க முடியாது. அதனால், விஜய் மல்லையா சில ஆண்டுகளுக்கு முன்பே, அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருக்க வாய்ப்பு உள்ளது. இது, சி.பி.ஐ.,க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனால், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|