Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

By: Nagaraj Fri, 31 July 2020 9:10:02 PM

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை... முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், தொடர் மழையினால் 115 அடியாக உயர்ந்துள்ள நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நன்செய் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முல்லைபெரியாறு அணையின் மூலம் ஒவ்வொரு வருடமும் திறக்கப்படும் தண்ணீரால் 14,707 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது. ஜூன் மாதம் முதல் போகத்திற்கும், ஜனவரி மாதம் இரண்டாம் போகத்திற்கும் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் மறைமுகமாக சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

pole valley,farmers,periyar watershed,season ,கம்பம் பள்ளத்தாக்கு, விவசாயிகள், பெரியாறு நீர்பிடிப்பு, பருவம்

அணையின் மொத்த உயரம் 142 அடி. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இன்னும் கைகொடுக்காத நிலையில், கடந்த சில தினங்களாக அணையின் நீர் பிடிப்பு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு மாதமாக 112 அடியில் இருந்த நீர் மட்டம் உயர்ந்து 113 அடியை கடந்த வாரம் எட்டியது. அதனை தொடர்ந்து 114 அடியும், வியாழக்கிழமை 115 அடியும், வெள்ளிக்கிழமை 115.10 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 527 கன அடி தண்ணீர் வருகிறது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 5.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதனால் பருவம் தவறிப்போன முதல் போக சாகுபடி செய்யமுடியாமல் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது உள்ள நிலவரப்படி, அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால், முதல் போக சாகுபடி செய்யமுடியும். எனவே, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக துணை முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :