Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

By: Monisha Thu, 06 Aug 2020 12:23:53 PM

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தமிழகத்தை சேர்ந்த தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உத்தமபாளையத்தில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

தொடர் மழையால் கடந்த 3 தினங்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து, தற்போது 122 அடியை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 6,585 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 933 கன அடியாகவும் இருக்கிறது. மேலும் அணையில் நீர் இருப்பு 2,747 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.

rain,mullaiperiyaru,vaigai dam,flood,river ,மழை,முல்லைப்பெரியாறு, வைகை அணை,வெள்ளம்,ஆறு

இதேபோல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 30.32 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 203 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 72 கன அடியாகவும் உள்ளது. இந்த அணையில் 381 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மற்றொரு பிரதான அணையான மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.70 அடியாக உள்ளது. ஆனால் இந்த அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை. 126 அடி உயரமுள்ள சோத்துபாறை அணையின் நீர் மட்டம் 75.76 அடியாக உள்ளது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags :
|
|