Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு

துபாயில் சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு

By: Karunakaran Mon, 16 Nov 2020 6:08:35 PM

துபாயில் சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு

துபாயில் வசித்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோருக்கு திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகள் அல்மாஸ் இங்கிலாந்து நாட்டில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். ஜாசம், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். இருவரும் துபாய் நியூ இண்டியன் மாடல் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சகோதரி உடன் படித்தவர்தான் மணமகள் என்றாலும் அவரை இதற்கு முன் சந்தித்தது இல்லை என ஜாசம் கூறினார். இருவரும் தங்கள் திருமண வரவேற்பை சமூக இடைவெளியுடன் நடத்த திட்டமிட்டனர். இதில் அவர்கள் வசித்து வரும் ஜுமைரா பகுதியில் வீட்டின் வெளியே அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாட்ஸ்-அப் மூலம் வீடியோவை அழைப்பாக அனுப்பி இருந்தனர்.

wedding,reception,indian couple,dubai ,திருமண, வரவேற்பு, இந்திய ஜோடி, துபாய்

திருமண வரவேற்பு நாளன்று சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக வித்தியாசமாக வீட்டு வாசலின் முன்னால் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவு முன் இருவரும் நின்றனர். மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் காரில் வருகை புரிந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடியே வாசலின் முன்னால் நின்று கொண்டிருந்த மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து புகைப்படமும் எடுத்து சென்றனர். காரில் இருந்து வாழ்த்து சொன்னவர்களையும் புகைப்படம் எடுத்தனர். ஒவ்வொரு காருக்கும் 2 நிமிட நேரம் வாழ்த்து தெரிவிக்க வழங்கப்பட்டு இருந்தது. சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து வித்தியாசமாக சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Tags :