Advertisement

புதிய வேளாண் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

By: Karunakaran Sun, 06 Dec 2020 5:34:52 PM

புதிய வேளாண் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, வேளாண்துறையில் மூன்று புதிய சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வேளாண் மசோதாக்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் சொல்வதாகவும் மத்திய அரசு கூறுகிறது. 3 சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் :

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புதிய ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020’, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்கிறது புதிய சட்டம். உணவுப் பொருள்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என்கிறது புதிய சட்டத்திருத்தம்.

இனி பெரு நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக சந்தையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர், தங்களிடமுள்ள பதுக்கல் பொருளை அதிக விலைக்கு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும்.

new agricultural laws,farmers struggle,delhi,opposite parties ,புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகள் போராட்டம், டெல்ஹி, எதிர் கட்சிகள்

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். ஆனால் சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வெளி மாவட்டத்துக்கோ அல்லது மாநிலங்களுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாது. இந்தச் சூழலில், குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் அறிந்துகொண்டு, விவசாயிகளிடமிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வதற்கே இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும். எனவே, இது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டம் அல்ல... பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம்.

விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்:

தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம். பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது. இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள். தனியார் பெரு நிறுவனங்கள், விவசாயிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது.

Tags :
|