Advertisement

எங்கள் கோரிக்கையிலிருந்து மத்திய அரசு ஓடுவது ஏன்?

By: Nagaraj Wed, 15 Feb 2023 08:57:30 AM

எங்கள் கோரிக்கையிலிருந்து மத்திய அரசு ஓடுவது ஏன்?

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையிலிருந்து மத்திய அரசு ஓடுவது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது.

பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துக்கள் தாறுமாறாக உயர்ந்ததற்கு மோடி அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவை கூடியதும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மேல்சபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. 2வது முறையாக அவை தொடங்கியபோது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதனால் பேரவையில் மீண்டும் கூச்சல், குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை மார்ச் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி மார்ச் 13ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் தங்கர் அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதானி விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே அதை விமர்சிப்பது முறையல்ல. இருப்பினும், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை. பயப்படவோ மறைக்கவோ எதுவும் இல்லை என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையிலிருந்து மத்திய அரசு ஓடுவது ஏன்? மறைக்க எதுவும் இல்லை என்றால் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய கேள்விகளை நீக்கிவிட்டனர். எங்களை மிரட்டி அமைதி காக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

Tags :
|