வந்தாச்சு குளிர்காலம்...கரூரில் குல்லா, ஸ்வெட்டர் விற்பனை அமோகம்
By: Nagaraj Wed, 25 Nov 2020 5:25:40 PM
கரூர் பகுதியில் குல்லா, ஸ்வெட்டர் விற்பனை ஜோர்... வடகிழக்கு பருவ மழை தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குல்லா, ஸ்வெட்டர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
நடப்பாண்டு கடந்த, அக்டோபர் மாத துவக்கத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை பெய்யவில்லை. கரூர் மாவட்டத்தில், கோடையை போல வெயில் சுட்டெரித்தது.
இந்நிலையில், வட கிழக்கு பருவமழை காரணமாக, கரூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக குளிர்ந்த காற்றும், பரவலாக மழையும் பெய்து வருகிறது.
பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால், பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா போன்ற ஆடைகளை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர்.
இதனால்,
திருப்பூர், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான
வியாபாரிகள் கரூரில் முகாமிட்டு உள்ளனர். குறிப்பாக, கோவை சாலை, வர்த்தக
நிறுவனங்கள் நிறைந்த ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில், ஸ்வெட்டர், தலைக்கு
அணியும் குல்லா விற்பனை சூடுபிடித்துள்ளது.
குழந்தைகள் முதல்
பெரியவர்களுக்கு ஸ்வெட்டர், 350லிருந்து, 850 ரூபாய் வரையிலும், குல்லா,
80லிருந்து, 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதை, பொதுமக்கள்
ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.