Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜராஜ சோழன் காலத்திலேயே அரசாங்கப்பணியில் இருந்த பெண் அதிகாரிகள்

ராஜராஜ சோழன் காலத்திலேயே அரசாங்கப்பணியில் இருந்த பெண் அதிகாரிகள்

By: Nagaraj Mon, 09 Jan 2023 09:15:56 AM

ராஜராஜ சோழன் காலத்திலேயே அரசாங்கப்பணியில் இருந்த பெண் அதிகாரிகள்

தஞ்சாவூர்: இன்று எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் பெண்களின் பங்களிப்பு நிச்சயம் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் ஆரம்பித்து விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வரை பெண்கள் தங்களின் திறமையை காண்பித்து வருகின்றனர்.

ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்துள்ளனர் அவர்கள்தான் அதிகாரிச்சி என்று அழைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்ற பெண் இருந்துள்ளார். 180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' வும் இருந்துள்ளார்.

பெண்களை அதிகாரிகளாக்கி அவர்களின் கீழ் பலரும் பணிபுரியும் வகையில் நடந்த நிர்வாகம் ராஜராஜன் சோழன் ஆட்சிக்காலத்தில் இருந்துள்ளது. ராஜராஜ சோழனின் பட்டத்தரசி உலோகமாதேவி. இவர் திருவையாற்றில் கட்டிய கோவில் ஒலோகமாதேவீச்சுரம் என்று வழங்கப்படும். இக்கோவிலில் உள்ள கல்வெட்டில், பெண் அதிகாரிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

“உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற கோவலூரு டையான் காடந் னூற்றெண்மநையும் அதிகாரிச்சி எருதந் குஞ்சிர மல்லியையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளில் ‘எருதந் குஞ்சிர மல்லி’ என்ற பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

rajarajacholan,officials,government work,1000 years,women ,ராஜராஜசோழன், அதிகாரிச்சிகள், அரசாங்க பணி, 1000 ஆண்டுகள், பெண்கள்

மேலும் ஒலோகமாதேவீச்சுரம் கோவிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் முதலாம் ராஜராஜன் காலத்திலும் ஓர் அதிகாரிச்சி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அவர் அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி என்பதாகும். அக்காலத்திலேயே பெண்களின் மீது மரியாதையும், மதிப்பும் கொண்டு, அவர்களின் திறமை மேல் நம்பிக்கை வைத்து அவர்களை அதிகாரிச்சியாக்கி உள்ளனர்.

கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டில், “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க….” என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

தான் மட்டுமே பங்களிக்காமல் மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தியிருக்கும் ராஜராஜ சோழனின் பாங்கு போற்றத்தக்கதுதானே. தனக்கு அடுத்தபடியான இடத்தைத் தன் தமக்கை குந்தவை தேவிக்கு (அக்கன்) அளித்துள்ளார்.

அடுத்து, பெண்டு என்னும் சொல்லால் அவருடைய மனைவியர் கொடுத்த கொடையைக் குறிப்பிடுவதோடு கொடுப்பார் கொடுத்தனவும் என்று சொல்வதன் மூலம் ராஜராஜசோழன் மற்றவர்களின் கொடையையும் உலகம் அறியும்படி செய்துள்ளார். பெண்களை அதிகாரிகளாக்கியும் உள்ளனர் என்பதால் அன்றே ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை என்பதை தன் ஆட்சிக்காலத்திலேயே ராஜராஜ சோழன் நிரூபித்துள்ளார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Tags :