உலக கோப்பை இறுதிப்போட்டி: டில்லியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
By: Nagaraj Sat, 18 Nov 2023 6:07:20 PM
புதுடில்லி: உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, இந்திய ரயில்வே இன்று சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதனைக் காண்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவழித்து விமானத்தில் வருவதை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை டில்லியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை அகமதாபாத் வந்து சேரும். இறுதிப்போட்டி முடிந்தபின்பு திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, டில்லிக்கு திரும்பிச் செல்லும்.
இதைப் போலவே மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகின்றன. இதில் ரூ.620 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1665 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மறுபுறம் 8-வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி.
1983 மற்றும் 2011 ஆகிய இருமுறை கோப்பை வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஆறாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.