Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகல்

டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகல்

By: Karunakaran Tue, 01 Dec 2020 09:11:25 AM

டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகல்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நாளை நடக்கிறது.

இதனை அடுத்து மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே வருகிற 4, 6, 8 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். அவரது காயம் குணமடைய நாள் பிடிக்கும் என்பதால் அவர் எஞ்சிய கடைசி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

david warner,odi,20-over series,india ,டேவிட் வார்னர், ஒருநாள், 20 ஓவர் தொடர், இந்தியா

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முறையே 69, 83 ரன்கள் சேர்த்த வார்னர் விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாகும். காயத்துக்காக சிகிச்சை பெற்று வரும் வார்னர் டெஸ்ட் போட்டி தொடருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவது கடினம் என்று கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக இடக்கை பேட்ஸ்மேன் டார்சி ஷார்ட் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலாவது ஒருநாள் போட்டியில் விலாப்பகுதியில் காயம் அடைந்ததால் அடுத்த போட்டியில் ஆடாத ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
|