Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணியிடம் 46 ரன்கள் வித்தியாசத்தில் சரண்டர் ஆன ராஜஸ்தான் அணி

டெல்லி அணியிடம் 46 ரன்கள் வித்தியாசத்தில் சரண்டர் ஆன ராஜஸ்தான் அணி

By: Nagaraj Sat, 10 Oct 2020 09:42:24 AM

டெல்லி அணியிடம் 46 ரன்கள் வித்தியாசத்தில் சரண்டர் ஆன ராஜஸ்தான் அணி

ராஜஸ்தானை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் பவுலிங் முடிவு பெரும் வீழ்ச்சியை தரும் என அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வெற்றிகரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி டெல்லியை குறைந்த ரன்களில் சுருட்டலாம் என எண்ணியிருந்த ஸ்மித்துக்கு ஏற்றாற்போல ராஜஸ்தான் பவுலர்கள் தொடக்கத்தில் பந்துவீசினாலும், அதன்பின்னர் கோட்டை விட்டனர்.

தொடக்கத்திலேயே டெல்லி அணி ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் பிருத்வி ஷா 19 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களையும் எடுத்திருந்தனர். மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ஸ்டொயினிஸ் மற்றும் ஹெட்மெயர் ஆகியோர் சிறந்த பார்ட்னஷிப்பை கொடுத்து டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

delhi team,first place,defeat,rajasthan team ,டெல்லி அணி, முதலிடம், தோல்வி, ராஜஸ்தான் அணி

30 பந்துகளுக்கு 39 ரன்களை எடுத்துவிட்டு ஸ்டொயினிஸ் அவுட் ஆக, அதிரடியாக 24 பந்துகளில் 45 ரன்களை குவித்த ஹெட்மெயரும் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த படேல் சகோதரர்கள் அணியின் ஸ்கோரை 180க்கு கொண்டு சென்றனர். 15 பந்துகளில் ஹர்ஷல் படேல் 16 ரன்களையும், 8 பந்துகளில் அக்‌ஷர் படேல் 17 ரன்களையும் எடுத்துவிட்டு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை குவித்திருந்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சரின் பவுலிங் மிரட்டலாக இருந்தது. 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மறுபுறம் 4 ஓவர்களை வீசியிருந்த திவாடியா 20 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தார். ஆனால் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்த ஆண்ட்ரிவ் டை 50 ரன்களை வாரிக்கொடுத்தது சொதப்பலாக அமைந்தது.

185 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்த்து ஆடிய ராஜஸ்தான் அணியில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய பட்லர், தொடங்கிய வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 8 பந்துகளை சந்தித்த அவர் 13 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்கத்திலேயே ரன்களை குவிக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்தார். நோர்ட்ஜ் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார் ஸ்மித். பின்னர் வந்த சஞ்சு சாம்சன் மற்றும் மஹிபால் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, களத்தில் நீண்ட நேரம் நின்ற ஜெய்ஷ்வாலும் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 82 ரன்களுக்கே ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களத்தில் நின்ற திவாடியா, இறுதி ஓவர் வரை வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. வெற்றி பெறமுடியாத சூழல் ஏற்பட்டதை உணர்ந்து, விரக்தியில் பேட்டை சுற்றிய திவாடியா இன்சைட் எட்ஜ்ஜில் போல்ட் ஆனார். இதையடுத்து 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் சுருண்டது.

டெல்லி பவுலிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசியிருந்தார். 4 ஓவர்களுக்கு 22 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 2 ஓவர்களை வீசிய ஆல்ரவுண்டர் ஸ்டொயினிஸ் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கடைசி நேரத்தில் அனல் பறக்க பந்துவீசிய ரபாடா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் வெற்றி மேல் வெற்றியை குவித்து வரும் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.

Tags :
|