Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடக்கம்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடக்கம்

By: Karunakaran Fri, 25 Dec 2020 11:48:10 AM

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை செலுத்துவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.

boxing day test,india,australia,melbourne ,பாக்சிங் டே டெஸ்ட், இந்தியா, ஆஸ்திரேலியா, மெல்போர்ன்

1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட அன்றைய தினத்தில் போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டது. இருப்பினும் 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ அன்று ஏதாவது ஒரு அணி அங்குள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும். இந்த முறை ‘பாக்சிங் டே’யில் இந்திய அணி மல்லுக்கட்ட இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆஸ்திரேலியா 15-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. இதில் 2018-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்ததும் அடங்கும். தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெறுமா? என்ற எதிர்பாார்ப்பை இந்த டெஸ்ட் உருவாக்கி இருக்கிறது. அடிலெய்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் சில அதிரடி மாற்றங்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

Tags :
|