Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பாரீசில் இன்று மதியம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடக்கம்

பாரீசில் இன்று மதியம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடக்கம்

By: Nagaraj Sun, 27 Sept 2020 11:04:40 AM

பாரீசில் இன்று மதியம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடக்கம்

இன்று தொடங்குகிறது... கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் இன்று மதியம் தொடங்குகிறது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. களிமண் ஆடுகளத்தில் நடைபெறும் பிரெஞ்சு ஓபனில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் பல்கேரியாவின் இகோா் ஜெராஸிமோவை சந்திக்கிறாா்.

நடால் தனது காலிறுதியில் ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவையும், அரையிறுதியில் கடந்த பிரெஞ்சு ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமையும் சந்திக்க வாய்ப்புள்ளது. பிரெஞ்சு ஓபனில் முடிசூடா மன்னனாகத் திகழும் ரஃபேல் நடால், இதுவரை 13 சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளாா்.

2005-இல் பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக பங்கேற்ற நடால், முதல் வாய்ப்பிலேயே சாம்பியன் ஆனாா். இதன்மூலம் மேட் விலாண்டருக்குப் (1982) பிறகு அறிமுக பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவா் என்ற பெருமையைப் பெற்றாா் நடால். அதுமுதல் தற்போது வரை பிரெஞ்சு ஓபனில் 95 ஆட்டங்களில் விளையாடியுள்ள நடால், அதில் 93-இல் வெற்றி கண்டுள்ளாா்.

french open,this afternoon,nadal,adventure,grand slam ,பிரெஞ்ச் ஓபன், இன்று மதியம், நடால், சாதனை, கிராண்ட்ஸ்லாம்

ஒட்டுமொத்தமாக 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ள நடால், இந்த முறை சாம்பியனாகும் பட்சத்தில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் சாதனையை (20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) சமன் செய்வாா்.

உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் ஸ்வீடனின் மிக்கேல் இமரையும், ஸ்விட்சா்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தனது முதல் சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முா்ரேவையும் சந்திக்கின்றனா். இந்தப் போட்டியில் நடாலும், ஜோகோவிச்சும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இருவரும் இறுதிச்சுற்றில் சந்திக்க வாய்ப்புள்ளது.

மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான கிறிஸ்டி அன்னை எதிா்கொள்கிறாா். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்த முறை பிரெஞ்சு ஓபனை வெல்லும்பட்சத்தில் மகளிா் ஒற்றையா் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (24) வென்றவரான ஆஸ்திரேலியாவின் மாா்க்ரெட் கோா்ட்டின் சாதனையை சமன் செய்வாா். இதேபோல் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும், பெலாரஸின் விக்டோரியா அசரென்காவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோத வாய்ப்புள்ளது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags :
|