Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • இன்றும் பிரமிக்க வைக்கும் தஞ்சை அரண்மனைக்கு ஒரு விசிட் அடிப்போமா!!!

இன்றும் பிரமிக்க வைக்கும் தஞ்சை அரண்மனைக்கு ஒரு விசிட் அடிப்போமா!!!

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:34:24 PM

இன்றும் பிரமிக்க வைக்கும் தஞ்சை அரண்மனைக்கு ஒரு விசிட் அடிப்போமா!!!

சென்னை: 400 ஆண்டுகளுக்கு முன்னாடி நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான் தஞ்சை அரண்மனை. அவர்களை தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களால் இந்த அரண்மனை விரிவுப்படுத்தப்பட்டது. நான்கு நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னைக்கும் புஜபலம் காட்டி நான் சிங்கம்ல என்பது போல் கம்பீரமாக தஞ்சையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாக, சுற்றுலா இடமாக காட்சியளிக்கிறது தஞ்சை அரண்மனை.

என்னங்க இருக்கு அரண்மனையில என்று கேட்காதீங்க. வந்து பார்த்தால் என்னதான் இல்லை இந்த அரண்மனையில் என்று சொல்லுவீங்க. மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என வரலாற்றின் வாழ்க்கையை இன்னும் தன்னுள் தாங்கி அசத்துகிறது தஞ்சை அரண்மனை. இந்த அரண்மனை வளாகம் 110 ஏக்கர். தர்பார் மண்டபம், மணி கோபுரம், ஆயுதச் சேமிப்பு கோபுரம், நீதிமன்றம் என நான்கு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டுள்ளது.

மணி கோபுரத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 7 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்கு புறச் சுவர்களின் மேல் வளைந்த சாளரங்கள் இருக்கு. இதை `தொள்ளக்காது மண்டபம்' என்று அழைத்துள்ளனர். கண்காணிப்பு கோபுரமாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம்தான் இந்த தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள், தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுதச் சேமிப்பு இடம் கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.

tanjore,palace,tourist,architecture,fame ,தஞ்சை, அரண்மனை, சுற்றுலா தலம், கட்டிடக்கலை, புகழ்

அரண்மனை உள்ளே உள்ள நீதிமன்றக் கட்டடத்தை, `ஜார்ஜவா மாளிகை', `சதர் மாளிகை' என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள். இது ஏழு மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளன.

இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவா நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரண்மனை, கி.பி.1674-லிருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக் கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் புனரமைக்கப்பட்டன.

இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதாக மட்டுமல்லாமல், நம்மை சுற்றியுள்ள வரலாற்று உண்மைகளை அந்த காலத்திற்கே கொண்டு செல்வது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாங்க... பாருங்க... நம் நாட்டின் கட்டிடக்கலையை புகழை போற்றுங்க. அருமையான சுற்றுலா தலம் என்றால் அதில் ஒன்றாக தஞ்சை அரண்மனையும் அடங்கும் என்பதில் ஐயமில்லை.

Tags :
|