வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது

சென்னை : தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 30.41 சதவீதம் மகாராஷ்டிர மாநிலத்தில் விளைகிறது. இதையடுத்து அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா 15.51 சதவீதம், மத்திய பிரதேசம் 13.66 சதவீதம் விளைவிக்கிறது. தமிழகம் 1.65 சதவீத விளைச்சலுடன் 13-வது இடத்தில் உள்ளது.

இதனால் தமிழகத்தின் வெங்காய தேவைக்கு மகாராஷ்டிர மாநிலத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை மகாராஷ்டிர மாநிலத்தில் காலத்தோடு பெய்யாத நிலையில், காரிப் பருவத்தில் ( ஜூலை - ஆகஸ்ட் ) வெங்காயம் நடவு நடைபெறவில்லை.


அதனால் அக்டோபர் மாதம் வெங்காய அறுவடை நடைபெறாததால், சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த 1 மாதமாக குறைந்து உள்ளது. எனவே இதன் காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து நேற்றைய நிலவரப்படி, நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கிலோ ரூ.42 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை அதிகரித்துள்ளது. வெளி சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.