இதுவரை 1 லட்சம் பிசிஆர் பரிசோதனைகள்; இலங்கை சுகாதார அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்திரம் 1232 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மொத்த பி.சிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 98634 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலைவரப்படி, பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் பெரும்பாலும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் வெளிநாட்டில் இருந்து வருகைத் தருபவர்களாகவே உள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரமதர் அலுவலகம் அண்மையில் ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஜுன் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.