தேனி மாவட்டத்தில் 2 டாக்டர்கள் உட்பட 235 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 337 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 102 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 73 பேர் பலியாகினர்.

இந்நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், ஒரு நர்சு, தேனி டாஸ்மாக் அலுவலக துணை தாசில்தார், டி.சிந்தலைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தொழில்நுட்ப உதவியாளர், தபால் அலுவலக ஊழியர், தபால் அலுவலக பெண் அலுவலர், பெண் போலீஸ், போலீஸ் ஏட்டு, போலீஸ்காரர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 337 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பை போன்று பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பும் தேனியில் அதிகரித்து வருகிறது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த தேனியை சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதேபோல் கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்து உள்ளது.