துபாய் - கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா ?

கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிரிந்தது.

இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனா இருந்ததாக தகவல் பரவி வருகிறது. இதனால் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து மலப்புரம் ஆட்சியர் கூறுகையில், விமானத்தில் பயணித்த 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது என்று தெரிவித்தார்.
உதவி எண்கள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - 1800 2222 71, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை - 0483 2719493, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் - 0483 2736320, Kozhikode Collectorate - 0495 2376901.