அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது


சென்னை: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நேற்று நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை (19-10-2023) 0830 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,

இதையடுத்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது 21-10-2023 வாக்கில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

நேற்று முன்தினம் காலை (18-10-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை (19-10-2023) 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது . இதன் காரணமாக, 21-10-2023 காலை வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 23-10-2023 வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும். குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.