அமெரிக்காவின் பப்பலோ போலீசார் 57 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா

பப்பலோ கலவர தடுப்பு காவல்துறை குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோர்ஜ் பிளாய்டு படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் 75 வயது முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தள்ளி விடப்பட்டுள்ளதால் தலையில் காயமேற்பட்டுள்ளது.

அமெரிக்க காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்டு படுகொலைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பப்பலோ பகுதியில் கலவர தடுப்பு காவல்துறை அணியொன்று சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவர்களிடம் கேள்வி எழுப்பிய 75 வயது முதியவர் ஒருவரை சில காவல்துறையினர் மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்தார். அதில் அவரது தலையில் காயமேற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பூதாகரமாக மேலும் வெடிதத்து. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு காவல்துறையினர் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு அந்த இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளது.

இதற்கு பப்பலோ கலவர தடுப்பு காவல்துறையினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் ஒருபகுதியாக பப்பலோ கலவர தடுப்பு காவல்துறை குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே தலையில் காயமேற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் அந்த முதியவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.