ஜெர்மனியில் வேகமமெடுத்த கொரோனா பரவல்; மீண்டும் லாக்டவுன் ஆரம்பம்

மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது... ஜெர்மனியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அங்கே கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இதனால் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள இடங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடியே 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 லட்சத்து 03 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 57 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 57.96 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக பரவியது. ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நோய் தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. கடுமையான லாக்டவுன் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

பரிசோதனை எண்ணிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கே பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில், மீண்டும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2,034 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,32,082 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 7 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 9,267 ஆக உயர்ந்துள்ளது. அங்கே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அங்கு மட்டும் கடுமையாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது.