அமித்‌ஷா, மேற்கு வங்காளம் குறித்து பொய்யான தகவல்களைக் கூறுகிறார் - மம்தா பானர்ஜி கண்டனம்

மேற்கு வங்காள மாநிலத்துக்கு மம்தா பானர்ஜி சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா, அனைத்து துறைகளிலும் மம்தா அரசு தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஊழல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற பல நிலைகளில் மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், அமித்‌ஷாவுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் உள்துறை மந்திரி. உங்கள் கட்சிக்காரர்கள் கூறும் பொய்யான தகவல்களை அப்படியே தெரிவிப்பது உங்களுக்கு அழகல்ல. அமித்‌ஷா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு செவ்வாய்க்கிழமை நான் விரிவான பதில் அளிப்பேன். ஆனால் இன்று இரண்டு வி‌‌ஷயங்களை மட்டும் பேசப்போகிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், தொழில்துறையில் மேற்கு வங்காளம் பூஜ்ஜியமாக இருப்பதாக அமித்‌ஷா கூறினார். ஆனால் உண்மையில், சிறு, குறு, நடுத்தர தொழில்களில் நமது மாநிலம்தான் ‘நம்பர் 1’ ஆக இருக்கிறது. நாம் கிராமப்புறங்களில் போதுமான சாலைகளை அமைக்கவில்லை என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிலும் முன்னணி மாநிலம் மேற்கு வங்காளம்தான். இத்தகவலை, மத்திய அரசே வெளியிட்டிருக்கிறது.அரசு கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக நான் வருகிற 28-ந்தேதி பிர்பும் மாவட்டத்துக்குச் செல்கிறேன். மறுநாள் அங்கு நடைபெறும் ஒரு பேரணிக்கு நான் தலைமை தாங்குகிறேன் என மம்தா பானர்ஜி கூறினார்.