தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10,300 ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை .. அன்பில் மகேஷ்

தமிழகம்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் இருக்க வேண்டும் என்று அரசு இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகி இருக்கிறது. ஆனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு தகுந்தாற் போல ஆசிரியர்கள் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்களை இடித்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ள அவர் இதுவரை 10 ஆயிரத்து 31 பள்ளிகள் பழுதடைந்துள்ளதாகவும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது அதனை ஈடு செய்ய நடப்பாண்டில் 10,300 ஆசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.