அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடியால் கிடைத்த ஒப்பந்தங்களுக்கு பாராட்டு

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, விண்வெளித்துறை, அன்னிய நேரடி முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து இருக்கிறார் என்று பாஜ தலைவர் ஜே.பி.நட்டா பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இதை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராட்டி உள்ளார். ராஜஸ்தானின் பரத்பூரில் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியபோது, இதை அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் குடும்பங்களின் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பா.ஜனதாவிலோ கட்சிதான் குடும்பம் ஆகும். முன்பெல்லாம் இந்திய பிரதமர்கள் அமெரிக்காவுக்கு செல்லும்போது, பயங்கரவாதம் குறித்து மட்டுமே விவாதித்து விட்டு வந்துவிடுவார்கள்.

ஆனால் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, விண்வெளித்துறை, அன்னிய நேரடி முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து இருக்கிறார். தற்போது இந்தியாவை குறித்து பேசும்போது, யாரும் பாகிஸ்தானை குறிப்பிடுவதில்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனை நாம் அடைந்துள்ளோம். உலகம் முழுவதும் பிரதமர் மோடியை புகழ்வதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.