அந்நிய நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல்

ஒப்புதல் அளித்தார்... அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடும் அந்நிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்நிய நிறுவனங்கள் தணிக்கை சட்டம் என்ற இம்மசோதா ஏற்கனவே குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சம்மதத்தோடு நிறைவேற்றப்பட்டது. இதை சட்டமாக அமல்படுத்தும் ஒப்புதல் கையெழுத்தை அதிபர் டொனால்ட்ட்ரம்ப் தற்போது வழங்கியுள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அந்நிய நிறுவனங்கள், அமெரிக்க அரசின் தணிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்றும், நிறுவனங்கள் அந்நிய நாட்டு அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் எனவும் இச்சட்டம் கூறுகிறது.

ஏற்கெனவே சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பல்வேறு வர்த்தகத் தடை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்ற மனநிலை பல நாடுகளில் நிலவுவதால் அமெரிக்கா மேலும் சீனா மீது நடவடிக்கைகளை எடுக்க தயாராகி இருக்கிறது.

சீன அதிகாரிகள் இச்சட்டத்தை சீன நிறுவனங்களை ஒடுக்கும் பாரபட்சமான சட்டம் என்று கூறியுள்ளனர். ஜாக்மாவின் அலிபாபா, பிரபல தொழில்நுட்ப நிறுவனம் பிண்டூடூ, பெரும் எண்ணெய் நிறுவனம் பெட்ரோ சீனா லிமிடெட் உள்ளிட்ட இருநூறுக்கும் மேலான நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.