ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 14வது முறையாக அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 14வது முறையாக அவகாசம்... ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 14வது முறையாக அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்.

அதன்படி 3 வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையும் அவசியம் என்பதால், அதனை பெற்ற பிறகு தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது. இதன்படி 14வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.