ஊட்டியில் பீன்ஸ் விலை உயர்வு... ஒரு கிலோ ரூ.120 விற்பனை!

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. வரத்து குறைவால் பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடு என உயர்ந்து வருகிறது.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமவெளி பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை கிலோ ரூ.120 ஆக உயர்ந்தது. ஊட்டி உழவர் சந்தைக்கு தினமும் 1,500 கிலோ பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். வரத்து குறைவால் 500 கிலோ முதல் 700 கிலோ வரை மட்டுமே கொண்டு வரப்படுகிறது.

உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.94-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு அத்தியாவசிய தேவையான பெரிய வெங்காயத்தின் விலை ஆண்டுதோறும் ஏற்றம் காணுவதும், பின்னர் இறக்கம் காண்பதும் தொடர்கிறது. ஊட்டியில் பீன்ஸ் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் இல்லாததால் பெரிய வெங்காயத்தை குறைந்த விலைக்கு வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.