சூறைக்காற்று காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து

இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

அவர்கள் படகில் சென்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து வருவார்கள். கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எட்டு மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்றிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சூறைக்காற்று வீசிவருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கன்னியாகுமரி கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் 10 முதல் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன.

இதன் காரணமாக இன்று படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. காலை 8.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ஆக்ரோஷமான அலை காரணமாக கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.