ஊரடங்கை தொடரலாமா? வேண்டாமா? முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஒவ்வொரு முறையும் கொரோனா ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில் பிறப்பிப்பதற்கு முன்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். தற்போது தமிழகத்தில் டிசம்பர் 31-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் நாளை மாலை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனாவின் மற்றொரு வீரிய வகை வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் ஊரடங்கை தொடரலாமா என்றும் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த வகை கொரோனாவின் அலை எந்த அளவுக்கு வீசும் என்பது போன்ற அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இது மிக முக்கியம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டமாக கருதப்படுகிறது.

முன்னதாக அனைத்து மாவட்ட கலெக்டர்களை அழைத்து காணொலிக் காட்சி மூலம் நாளை காலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். புதிய வகை கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மக்களுக்கு என்ன அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு தொடருமா அல்லது என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் புதிய ரக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு என்னென்ன புதிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிடுவார்.

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே. சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.