ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

தடை விதிக்க முடியாது... பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச இணையதளங்கள் குறுக்கீடால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. ஆன்லைன் வகுப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி காஞ்சிபுரத்தை சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், ஆபாச இணையதளங்கள் குறுக்கீடு செய்யாத வகையிலும், அதுபோன்ற இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையிலும் சட்ட ரீதியாக விதிகளை வகுக்கும் வரையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில், மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுகிறது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் 'கொரோனாவால் அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளதால் இடைக்கால தடை விதிக்க முடியாது. பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.