முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்

திருச்சி : திருச்சியில் இன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவக்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திருச்சியில் வேளாண் சங்கமும் கண்காட்சி நாளை தொடங்கும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் சங்கமம் 2023 என்ற வேளாண் கண்காட்சி கருத்தரங்கு திருச்சியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 230 உள்ள அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டு கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதையடுத்து இதில் 17 மாநில அரசின் துறைகள், 8 மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த 3 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் பாரம்பரிய நெல், இதர பயிர் வகைகள் வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள்,பசுமை குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டவுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 9 மணியளவில் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிடுகிறார். எனவே இதற்காக சென்னையிலிருந்து இன்று காலை விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு 11 மணிக்கு செல்கிறார். திருச்சியில் இன்றும் , நாளையும் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்கும் அவர், நாளை காலை 10:45 மணிக்கு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 14 திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். அதையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி வந்து இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்.