தொடர் மழையால் நடபுப்பணிகள் தொடக்கம்

நடவுப்பணிகள் தொடக்கம்... போடி பகுதியில் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பிய நிலையில், நடவு பணிகள் தொடங்கியுள்ளது.

போடி பகுதியில் கொட்டகுடி ஆறு மற்றும் முல்லை பெரியாறு பாசனத்தின் கீழ் ஒருபோக சாகுபடி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பரவலான நல்ல மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கொட்டகுடி ஆற்றிலிருந்து செல்லும் வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு குளங்கள், கண்மாய்கள் நிரம்பத் தொடங்கின.

இதனையடுத்து நாற்றாங்கால் அமைக்கும் பணிகளை தொடங்க போடி வேளாண்மை துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்பேரில் பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, கூழையனூர், உப்புக்கோட்டை, விசுவாசபுரம், பொட்டல்களம், காமராஜபுரம், மீனாட்சிபுரம், முந்தல், குரங்கணி, போடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் நாற்றாங்கால் பணிகளை தொடங்கியுள்ளனர்.

சில பகுதிகளில் வெங்காயம் நடவு செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடியில் 120 நாள்களில் அறுவடைக்கு வரக்கூடிய நெல் பயிர் செய்வதற்காக 25 நாள்கள் நாற்றாங்கால் பணிகள் நடைபெறும். பின்னர் இவை வயல் வெளிகளில் நடவு செய்யப்படும்.

வேளாண்மை துறை சார்பில் நெல் நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து போடி பகுதியில் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.