இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 29,75,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பினால் 945 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55794 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,58,947-ல் இருந்து 22,22,578 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய 6,97,330 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 74.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.