நெல்லை மாவட்டத்தில் ஒரேநாளில் 131 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 2,098 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 2,098 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 968 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 131 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,229-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.