அசாம், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 9 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் வடமாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் நிவாரண முகாம்களை தஞ்சமடைந்து உள்ளனர்.

அசாம் மாநிலம் தொடர் கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 26 மாவட்டங்களில் 28 லட்சத்து 32,000 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிப்புடைந்துள்ளனர்.

தற்போது ழை வெள்ளம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அசாம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் 9 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டன. இதனை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து துவக்கினார்.