1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்த்துறை பிறப்பிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்ய கடந்த ஆண்டு ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் எழுத, படிக்க, அடிப்படை கணக்கு போட தெரிந்திருப்பவராக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எனவே அதன்படி மாணவர்களின் கவனிக்கும் திறன், எழுத்தாற்றல், பேசும் திறன், படிக்கும் திறன் ஆகியவற்றை சோதனை செய்ய பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது 1 முதல் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) வருகிற ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி வரை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வை ஆன்லைனில் அல்லது நேரடியாக நடத்தலாம் என அறிவித்துள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில் 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.