வரும் 3ம் தேதி முதல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்

வரும் 3ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள்... ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் 16 முதல் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கோடை விடுமுறைக்கு பின்னர் திறக்கப்படும் பள்ளிகள் இப்போது வரை திறக்கப்பட வில்லை. கொரோனா காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை வழங்க கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை வழங்க உத்தரவிடப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும், 1 மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கே மட்டுமே புத்தகங்கள், புத்தகப்பை வழங்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.